விநாயகர் கடவுளே கிடையாது சித்தர்கள் ரகசியம்
விநாயகரை வணங்குவதால் என்ன பயன் கிடைக்கும்?
விநாயகப் பெருமான், சிவசக்தியின் முழுமையான திருவருள் பெற்ற தெய்விக பக்தர் ஆவார். விநாயகரை வழிபடுவதால் ஒருவர் மூன்று பயன்களை அடையலாம் என ஔவையார் கூறுகிறார்.
"வாக்குஉண்டாம் நல்ல மனம்உண்டாம் மாமலராள்
நோக்குஉண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்புஆர் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு"
-மூதுரை
இப்பாடலில் விநாயகனை வணங்குகிறவர்கள் பெறும் பயன்களாகப் பின்வருவனவற்றை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. சொல்வன்மை பெருகும்.
2. உறுதியான மனமும் நல்ல எண்ணங்களும் உருவாகும்.
3. செல்வ வளம் பெருகும்.
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி - ஆகிய முப்பெரும் சக்தியின் திருவருளையும் விநாயகப் பெருமானை வணங்குவதால் பெறலாம்.
செல்வம் என்றால் ரூபாய் நோட்டு அல்ல. செல்வம் என்றால் மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆரோக்கியமான வாழ்க்கை, நீண்டநாள் வாழ்க்கை, நல்ல பண்புடைய பிள்ளைகள் போன்றவை ஆகும்.
தெய்வங்களை பூஜிக்க பொன்னோ பணமோ தேவையில்லை; மலர்களே போதும். பூக்களைக் கொண்டு வழிபாடு செய்வதால் தான் இதற்கு 'பூசெய்' என்ற பெயர் வந்தது.
பூஜை செய்யும்போது முழுமனதுடன் வேறு எதையும் சிந்திக்காமல் இறையருளை மட்டுமே வேண்டி செய்யவேண்டும். இதையே ஔவையார் 'மேனி நுடங்காது' என்றார்.
சொல் விளக்கம்:
வாக்கு உண்டாம் - சொல்வண்மை பெருகும்
நல்ல மனம் உண்டாம் - உறுதியான மனமும் நல்ல எண்ணங்களும் வளரும்
மாமலராள் - லட்சுமிதேவி
நோக்கு உண்டாம் - திருவருள் கிடைக்கும்
மேனி நுடங்காது - உடலில் சோர்வு இல்லாமல்
பூக்கொண்டு - பூக்களைக் கொண்டு வழிபடுதல்
துப்புஆர் திருமேனி தும்பிக்கையான் - பவளம் போன்ற திருவுடலை உடைய விநாயகர்
பாதம் - திருவடி
தப்பாமல் சார்வார் தமக்கு - மறவாமல் வணங்குபவர்களுக்கு
No comments:
Post a Comment