Monday, March 11, 2013

சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள்..

சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள்..






15, 20 வருடங்களுக்கு முன் வேலை கிடைக்க வேண்டுமானால் ஒன்று B.Com படித்து வங்கி வேலைக்கு செல்ல வேண்டும், அல்லது அரசுத்தேர்வு எழுதி கிடைக்கும் ஊருக்கு வேண்டும். இல்லையென்றால் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு வேலையை பார்த்து கிடைக்கும் சம்பளத்தில் கொஞ்சம் செலவழித்து நிறைய சேமித்து வாழ வேண்டும். பின் 90களின் ஆரம்பத்தில் வந்த தாராளமயமாக்கல் 90களின் இறுதியில் பொறியியல் மற்றும் கணினி சார்ந்த படிப்புக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளித்தர ஆரம்பித்தன. வங்கி, அரசு வேலை மோகம் மறந்து எங்கு பார்த்தாலும் “ஸாஃப்ட்வேர் என்ஜினியர்” என்று கூறிக்கொண்டவர்கள் இருந்தார்கள். 2008ல் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணும் வரை கம்ப்யூட்டர் துறையும் ஒரு செழிப்பான துறையாக இருந்தது. ஆனால் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி வந்ததில் இருந்து இன்று இந்த கட்டுரையை எழுதும் இந்த நொடி வரை விற்பனை துறை என்பது படித்தவன் படிக்காதவன் என பாகுபாடு பார்க்காமல் பலருக்கும் படி அளந்து கொண்டிருக்கிறது.




சேல்ஸ் வேலை என்பது சினிமாவில் “நாய்ப்பொழப்பு” என்று நகைச்சுவை காட்சியில் சொல்லும் அளவுக்கு மிகவும் அலைச்சல் மிகுந்த வேலை தான். ஆனால் ஒரு நிறுவனத்தின் வருமானம் என்பது அந்நிறுவனத்தில் இருக்கும் விறபனையாளர்களால் தான். எந்த ஒரு நிறுவனமும் மிகச்சிறந்த விற்பனையாளனை வைத்துக்கொள்ள வேண்டும் என தான் நினைக்கும். ஏனென்றால் வாடிக்கையாளரை நேரடியாக சந்திக்கப்போவது அவன் தான். வாடிக்கையாளரப்பொறுத்தவரை அந்த விற்பனை பிரதிநிதி தான் அந்த கம்பெனி. அதனால் தான் மற்ற வேலைகளுக்கு வெறும் பட்டங்கள் மட்டுமே போதும் என்றாலும், விற்பனை வேலைக்கு மட்டும் பல கட்ட நேர்முகத்தேர்வு வைக்கிறார்கள். இப்போது பல நிறுவனங்களில் MBA படித்த ஆட்களை எடுத்தாலும் அவர்களுக்கும் கஷ்டமான நேர்முகத்தேர்வு & கடுமையான பயிற்சி கொடுத்து தான் வேலைக்கு எடுக்கிறார்கள். யாரும் நினைப்பது போல் அது ஒரு கஷ்டமான வேலை இல்லை, அனுபவித்து செய்யும் போது. சேல்ஸ் வேலையை அனுபவித்து செய்தால் தான் ஜெயிக்க முடியும். அது எப்படி என்று பார்க்கலாம்.





எல்லோரும் சேல்ஸ் வேலையில் எளிதாக ஜெயித்து விடலாம். “என்னால் சகஜமாக பேச முடியாது”, “நான் கூச்ச சுபாவம் உள்ளவன்” என்று சொல்பவர்கள் கூட சேல்ஸ் வேலையில் எளிதாக ஜெயிக்கலாம். பள்ளி, கல்லூரி காலத்தில் நான் ஒரு முறை கூட முன் நின்று பேசியதில்லை. அவ்வளவு கூச்சம். இன்று நானும் ஒரு விற்பனை பிரதிநிதி, என் வேலையை நான் அவ்வளவு அனுபவித்து ரசித்து செய்கிறேன். 




சேல்ஸ் வேலையில் ஜெயிக்க முக்கியமான நான்கு விசயங்கள் தேவை.


1. உடல் மொழி
2. பொறுமை
3. கவனம் (Listening).
4. சேவை

நீங்கள் லொட லொடவென்று ஓயாமல் பேச வேண்டுமென்பதில்லை. மிக அழகாக விளம்பர மாடல் போல் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் மேலே கூறியிருக்கும் எளிதான நான்கு விசயங்களை புரிந்து கொண்டு பின்பற்றினால் போதும், சேல்ஸ் வேலை என்பது உங்களுக்கு உண்மையிலேயே நல்ல அனுபவம் தான்.


இந்த ஒவ்வொன்றை பற்றியும் பின் வரும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். அதற்கு முன் சேல்ஸ் வேலையில் இருக்கும் சில பல நன்மைகளை சொல்லிவிட்டு இன்றைய பகுதியை முடித்துக்கொள்ளலாம்.

1. இத்தன மணிக்கு வரணும், இவ்வளவு நேரம் வேலை செய்யணும் என்கிற கட்டாயம் இல்லை.
2. வீட்டில் கட்ட வேண்டிய கரெண்ட் பில், கேஸ் பில், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, அம்மாவை மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வது என வேலை நேரத்தில் பெர்மிசன் போடாமலே எல்லாம் செய்யலாம் :-D
3. ஆள் பழக்கம் கிடைக்கும். உங்களுக்கு எந்த ஊரில் எது சம்பந்தமாக விவரம் வேண்டுமானாலும், நீங்கள் சேல்ஸ் வேலையில் இருந்தால் அந்த விபரம் அடுத்த அரை மணிநேரத்தில் உங்களுக்கு கிடைத்துவிடும்.
4. நீங்கள் ஊர் சுற்ற கம்பெனியே காசு கொடுத்து தினமும் அனுப்பி வைக்கும் வேலை சேல்ஸ் வேலை தான். அதை அலைச்சல் என்று பார்க்காமல், ஒவ்வொரு மில்லி பெட்ரோலையும் பணமாக பாருங்கள், அலையும் போது அலுப்பு தட்டாது.
5. தெரியாத ஊரில் கூட தைரியமாக வாழலாம், உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் அவ்வளவு உதவி செய்வார்கள்.
6. பல ஊரில் மொழி, கலாச்சாரம், சுற்றுலாத்தளங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
7. நாட்டு நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.






For More Details  - Visit - www.v4all.org 

3/27,SMS Layout Ondipudur,Coimbatore - 641016 
cell - 97900-44225 & 8680001226