உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார கெளரி விரதமாகும். இது மிகவும் பக்திபூர்வமாக அனுட்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புமிக்க நன்மை பயக்கும் விரதமாகும்.
இந்த விரதம் அனுட்டிக்க விரும்புவோர் இருபத்தொரு நாள் உபவாசமிருந்து உமையம்மையை நினைந்து வணங்குவதோடு சிவபெருமானையும், சேர்த்து வழிபாடியற்றுதல் வேண்டும். இவ்விரதம் புரட்டாதி மாதத்தில் சுக்கில பட்சத்து தசமி முதலாக ஆரம்பமாகி தீபாவளிப் பண்டிகை நாளில் பூர்த்தியாகும்.
இருபத்தொரு நாள் உபவாசமென்றால் சாப்பாடு இல்லாமலே இருத்தல் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அதாவது பகலிலே சாப்பிடாமலிருந்து தினமும் அந்திப் பொழுதில் பூஜை வழிபாடு ஆராதனைகளை முடித்துக் கொண்டு இறைவன் இறைவிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள்களை மட்டும் உட்கொண்டு விட்டு தண்ணீர் அருந்துவது விசேஷம்.
முடியுமாயின் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் இறைவனுக்கும் இறைவிக்கும் மஞ்சள் உருண்டை, எள்ளுருண்டை, அரியதரம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வகைக்கு ஒவ்வொன்றாகப் படைத்து குத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி பக்திப் பனுவல்களைப் பாராயணஞ் செய்தல் வேண்டும்.
இந்த விரதமிருப்பவர்கள் தினமும் காலை எழுந்து புனித புண்ணிய நீராடித் தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து சந்தியாவந்தனம் முடித்து வீட்டிலோ அல்லது ஓர் ஆலயத்திலோ இருபத்தொரு இழைகள் கொண்ட நூலைக் கும்பத்திலோ அன்றி லிங்கத்திலோ சாத்தி பூஜை வழிபாடு ஆராதனையின் பின்பு பூவும் நீரும் கொண்டு வலம் வந்து மிக்க பயபக்தியுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுப் போடுதல் வேண்டும். இது மிகவும் பக்குவமாகப் பக்தியுடன் செய்யப்பட வேண்டும்.
இறுதியாக இருபத்தோராம் நாள் காப்பு நூல் கட்டும் போது முதல் வருடம் கையிற் கட்டியிருந்த காப்பை நீக்கிவிட்டு புதுக்காப்பைக் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடந்த வருடம் கட்டிய காப்பு நூலையும் பூஜித்த லிங்கத்தையும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இவ்விரதத்தை தொடர்ந்து 21 வருடம் அனுட்டிக்க வேண்டும். அதுவே ஆன்ம ஈடேற்றம் தரவல்லது.
சிலபேர் இருபத்தொரு வருடம் என்றில்லாது வாழ்நாள் முழுவதும் நிறுத்தாமல் அனுட்டிப்பர். இருபத்தொரு நாளும் வழிபாடியற்றிய விரதகாரர் இறுதி நாளில் முழு நேரமும் உபவாசமிருந்து அடுத்தநாள் அதிகாலை இந்த விரதமிருந்த நற்பயனை எனக்குத் தர வேண்டுமென்று மானசீகமாக விண்ணப்பித்து வேண்டிக் கொண்டு பாறணை பண்ணலாம்.
இந்த விரதத்தை முறைப்படி அனுட்டித்தவர்களுக்கு நல்ல சிறப்பான மங்களம் நிறைந்த இல்லற வாழ்க்கையும் நன்மக்கட்பேறும் நிச்சயம் கிடைக்கும். மேலும் இடை நடுவில் தடைப்பட்ட திருமணங்கள் நல்லமுறையில் மங்களகரமாக நிறைவேறும். அது மாத்திரமன்றி பெண்களுக்கு அவர்கள் விரும்பய மாதிரி கணவரும் புத்திரப் பேறும் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த விரதம் பற்றிய ஒரு பூர்வீகக் கதையும் வழக்கிலிருக்கிறது. அதாவது முன்னொரு காலத்தில் திருக்கயிலாய மலையின் மீது சிவனும் சக்தியும் வீற்றிருக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்ம விட்டுணுக்களும் தும்புரு, நாரதர் முதலானோரும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் இருவரையும் வணங்கிச் சென்றனராம்.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சிவனை மாத்திரம் வழிபட்டு விட்டு அம்பிகையை வணங்காமல் சென்றுவிட்டார். அதைக் கண்ணுற்ற உமையவள் தமது பிராணநாயகராகிய சிவபெருமானைப் பார்த்து, “ஐயனே! பிரபுவே! மன்னிக்கவும், நான் இப்படிக் கேட்டதைத் தவறாக எண்ணாமல், அது என்ன? விபரீதச் செயல்; என்னை வணங்காமல் தங்களை மட்டும் வணங்கி விட்டுச் செல்கிறாரே! காரணம் தாங்கள் அறியாததா?” என்று வினவி நின்றார். அதைக் கேட்ட சிவன் சிரித்துக் கொண்டே “தேவி! பிருங்கி முனிவருக்கு எந்தப் பாக்கியமும் தேவையில்லை. மோட்சத்தை மட்டுமே விரும்பிய அவர் உன்னை விடுத்து, என்னை வணங்கிச் செல்கின்றார். இதிலென்ன?” என்றார்.
அதைக் கேட்ட உமையவள், “அப்படியா! சங்கதி!!” என்று கூறியவண்ணம் பிருங்கி முனிவரிடம் சென்று “ஏ! பிருங்கி முனிவரே! உம்முடம்பிலுள்ள இரத்தம், மாமிச இறைச்சி’ முதலியன என்னுடையவை. ஆகவே, அவற்றைக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டார். உடனே பிருங்கி முனிவர் தம்முடம்பிலுள்ள தசை, நார், இரத்தம் என்பவற்றை உதறிக்கொட்டிவிட்டார்.
இரத்தம் முதலானவை இல்லாமற் போனதால் பிருங்கி முனவரின் உடல் தளர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடினார். நிலை தடுமாரிய பிருங்கியைப் பார்த்து சிவபெருமான், “அட பிருங்கி முனிவரே! நீர் ஏன் அசத்தனானீர்?” என்று வினவினார். அதற்கு அவர் “சர்வேஸ்வரனே! சிறியேன் சக்தியை விட்டுவிட்டுத் தங்களை மாத்திரம் வணங்கியதால் வந்த வினை” என்று கூறி அங்கலாய்த்தார்.
உடனே சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு ஒரு தண்டை எடுத்து ஊன்று கோலாகக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட பிருங்கி முனிவர் அதனை ஊன்றி நடந்து தனது ஆச்சிரமத்தை அடைந்தார். இப்படி நடந்ததைக் கண்ணுற்ற உமையம்மை இந்த அவமதிப்பைத் தாங்க முடியாமல் சிவபெருமானுடன் கோபித்துக் கொண்டு விண்ணுலகான கைலயங்கிரியை விட்டு நீங்கிப் பூலோகம் சென்றார். பின்பு அவர் கெளதம முனிவருடைய ஆச்சிரமத்தையடைந்து ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தார்.
மழையின்மையால் வாடிப்போயிருந்த கெளதம முனிவரது ஆச்சிரமத்துப் பூச்செடிகளெல்லாம் அம்பிகையின் வரவால் பூத்துக் குலுங்கின. அழகான புஸ்பங்கள் மலர்ந்து அந்த ஆச்சிரமம் முழுவதும் நறுமணம் வீசியது.
தம்முடைய ஆச்சிரமம் திடீரென்று அழகுமிக்கதாக பூக்கள் மலர்ந்து நறுணம் வீசியதைக் கண்ட கெளதம முனிவர் அதிசயித்து வெளியில் வந்து பார்த்த போது, அம்பிகை அமர்ந்திருப்பதைக் கண்டு “தாயே! லோகமாதா! ஆதிபராசக்தியே! உமையவளே! தாங்கள் என் ஆச்சிரமத்துக்கு வந்த காரணம் யாதோ?” என்று பணிவுடன் வினவி நின்றார். அவருக்கு நடந்தவற்றை விவரமாகக் கூறிய அம்பிகையை கெளதம முனிவர் ஓர் அழகிய சிம்மாசனத்தை வரவழைத்து அதில் அம்பாளை எழுந்தருளச் செய்து வணங்கி நின்றார்.
அந்நேரம் அம்பிகையானவள் மகிழ்ச்சியடைந்து “ஓ முனிவரே! யான் ஒரு விரதம் அனுட்டித்து இறைவனை அடைய நீர்தான் வழிகாட்ட வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டாள். அதைக் கேட்ட கெளதமரும்” தேவி! பூமியில் ஒரு நல்ல விரதம் உண்டு. அதுதான் கேதாரகெளரி விரதம். அதனை அனுட்டித்தால் தாங்கள் சிவபெருமான¨ச் சென்றடையலாம். இதோ அதற்கான விதிமுறைகளைக் கூறுகிறேன். கேட்பீர்களாக!” என்று கூறி கேதாரகெளரி விரதம் அனுட்டிக்கும் விதிமுறைகளையும் சொல்லி வைத்தார்.
அதைக்கேட்ட அம்பிகையானவள் உடனே அந்த விரதத்தை முறைப்படி நோற்று சிவபெருமானிடம் சென்றடைந்தார். சிவபெருமானும் அம்பிகையை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாமபாகத்தைக் கொடுத்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
இடபாரூடராகக் காட்சி கொடுத்த சிவபெருமானிடம், “ஐயனே! இந்த விரதத்தை முறையாக அனுட்டிப்பவர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தேவரீர் வழங்கியருள வேண்டும்” என்று உமையவள் விண்ணபிப்பித்து நின்றார். அது கேட்ட சிவபெருமானும்” அப்படியே ஆகட்டும், தேவி! உமையவளே! உன் விரும்பப்படியே இந்தக் கேதார கெளரி விரதத்தை முறையாக அனுட்டிப்பவர்கள் இப்பூவுலகில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெற்றுச் சகல செளபாக்கியங்களுடன் வாழ்வர்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஆதலால் இந்தக் கெளரி விரதத்தை சைவமக்கள் ஒவ்வொருவரும் முறையாக அனுட்டித்து மனித வாழ்வில் சகல ஐசுவரியங்களையும் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழ தம்மைத் தாமே தயார்படுத்திக் கொள்வார்களாக…!
No comments:
Post a Comment