ரிஷிகள் யாவர் ?
^^^^^^^^^^^^^^^^^^^^
ரிஷிகள் என்பவர்கள் வேதங்களின் துதிப்பாடல்களை இயற்றியவர்கள். இவர்கள் மேன்மையான தவங்கள் மேற்கொண்டு சத்தியத்தையும் மிக உயரிய ஞானத்தையும் அடைந்தவர்கள்.
இவர்கள் உணர்ந்த ஞானத்தையும் த்த்துவத்தையும் பாடல்களாகவும் சுலோகங்களாவும் வேதங்களில் வெளிபடுத்தினர்.
’ரிஷி’ என்றால் ஆன்மீக அறிவால் பொருளுலகத்தைக் கடந்து மிகவுயர்ந்த மெய்பொருளை அடைந்தவர்கள் என விளக்கப்படுகின்றது.
ரிஷிகள் வேதங்களிலும் இந்துதர்ம நூல்களிலும் மிக உயர்வாகப் போற்றப்படுகின்றனர்.
சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு தர்மத்தை விளக்குகின்றனர்.
பிருகதாரண்யக உபநிடதம் (2.2.6) மற்றும் சாமவேத ஜைமினிய பிரம்மாணம் (2.218) சில முக்கிய ரிஷிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
இவர்கள் சப்தரிஷிகள் (ஏழு ரிஷிகள்) என்றும் அறியப்படுகின்றனர்.
1) அத்ரி
2) பரத்வாஜர்
3) கௌதமர்
4) ஜமதக்னி
5) கஷ்யப்பர்
6) வசிஷ்டர்
7) விஷ்வாமித்ரர்
இவர்களைத் தவிர்த்து பிருகு, நாரதர், அகத்தியர் ஆகியோரும் புகழ்ப்பெற்ற ரிஷிகள் ஆவர்.
பெண் ரிஷிகளை ரிஷிகா எனக் குறிப்பிடுவர். ரிக்வேத காலத்தில் பல பெண் ரிஷிகளும் இருந்தனர். அவர்கள் அருளிய பாடல்கள் ரிக்வேதத்தில் உள்ளன.
ரிஷிகளில் சிலர்: ரோமஷா, லோபமுத்திரை, அபலா, கத்ரு, விஸ்வாவரா, கோஷா, வகாம்பிரிணி, பௌலோமி, யமுனை, இந்திராணி, சாவித்திரி, தேவயாணி, நோதா, சிகதானிவவரி, கௌபயனா ஆகியோர் ஆவர்.
ரிஷிகளைப் பற்றிய சில தகவல்கள்
1) அத்ரி – ரிக்வேதத்தின் ஐந்தாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அனுசுய தேவி. தத்தரேயர் மற்றும் துருவாசரின் தந்தை.
2) பரத்வாஜர் – ரிக்வேதத்தின் ஆறாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவர் துரோணாச்சாரியாரின் தந்தை.
3) கௌதமர் – கோதமர் என்றும் அழைக்கப்படுகிறார். ரிக்வேதத்தின் நான்காவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அகலியை.
4) ஜமதக்னி – சாஸ்திரங்களிலும் தற்காப்புக் கலையிலும் தேர்ந்தவர். பரசுராமரின் தந்தை.
5) கஷ்யப்பர் – கஷ்யப்ப சம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலை இயற்றியவர். இவரின் பிறப்பிடமான காஷ்மீருக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.
6) வசிஷ்டர் – ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலப் பாடல்களை அருளியவர். இவரின் மனைவி அருந்ததி. இதனால் அவர் அருந்ததிநாதன் என்றழைக்கப்பட்டார்.
7) விஷ்வாமித்ரர் – ரிக்வேதத்தின் மூன்றாவது மண்டலப் பாடல்களை அருளியவர். காயத்திரி மந்திரத்தை பரமாத்மனிடமிருந்து பெற்று வேதத்தில் வெளிபடுத்தியவர். இவரின் மகள் சகுந்தலை.
8) அகத்தியர் – சித்தர்களில் மூத்தவர், அகத்திய சம்ஹிதை எனும் அரும்பெரும் நூலை அருளியவர். அகத்தியம் எனும் தெய்வ தமிழிலக்கண நூலை அருளியவர். இவரின் மனைவி லோபமுத்திரை.
9) புலஸ்தியர் – விஷ்ணு புராணத்தை அருளியவர். குபேரன், ராவணன் ஆகியோரின் பாட்டனார்.
10) அங்கிரஸ் – அதர்வண வேதத்தின் பல பாடல்களை அருளியவர். பிரகஸ்பதியின் தந்தை.
11) பிருகு – பிருகு சம்ஹிதை எனும் ஜோதிட நூலை அருளியவர்.
No comments:
Post a Comment