Tuesday, March 8, 2016

மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின சிறப்பு பகிர்வு
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.

பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை .


தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு நிராகரிக்கப்பட்டது.மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலையில் சேர்ந்தார்.ஆனால் அங்கேயும் தொடர்ந்து படிக்கவில்லை,சினிமா ஆர்வம் உந்தித்தள்ள உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராக சேர்ந்து கொண்டார்.ஒரு நாள் கூட விடுமுறை இல்லாத வேலை அது.

யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கியது தான் வாழ்வின் முதல் திருப்புமுனை.இருபத்து ஆறு நிமிடம் ஓடும் இப்படம் கவலைகள் இல்லாத ஒரு ஹிப்பி இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தை கடப்பதை நகைச்சுவையாக வசனமே இல்லாமல் பின்னணியில் கிடார் இசையை கொண்டு மட்டும் சொல்லும்.இது பலவேறு விருதுகளை ஸ்பீல்பெர்க் பெற உதவியது.

ரொம்பவும் கூச்சசுபாவம் உள்ளவர்.பெரும்பாலும் நண்பர்கள் இல்லாதவர். தன் இளமைக்காலத்தில் தந்தை மற்றும் தாய் விவாகரத்து பெற்று பிறந்ததன் தாக்கமும் ,ஒரு மூத்த அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் தான் உலக புகழ் பெற்ற ஈடி படம் எடுக்க உந்துதல் எனவும் சொன்னார்.


கடுமையாக தன் படங்களுக்கு உழைப்பார்.ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக்!அப்படிதான் பார்க்கிற ரசிகர்கள் உணரவேண்டும் என்பார்.அதிலும் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் !அப்படி எடுத்த படங்கள் தான் ஜுராசிக் பார்க்,ஈடி,டின்டினின் சாகசங்கள் போன்றவை.

புத்தகங்கள் படிப்பதை விரும்பாதவர். நன்றாக உற்று கவனிப்பார்.பலபடங்களை ஒரே வாரத்தில் பல முறை பார்த்தும் விடுவார்.கதை சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார்.ஜாஸ் கதையை படிப்பதற்கு முன் வரை அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றே நினைத்துக்கொண்டு இருந்தார்.படித்து முடித்ததும் உடனே படம் எடுக்கலாம் என கிளம்பிவிட்டார்.

நிஜம் இல்லாத உலகத்தை காட்டி படத்தை ஓட்டி விடுகிறார் என பிறர் சொன்னதும், 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' எனும் ஹிட்லரிடம் இருந்து ஆயிரம் யூதர்களை காப்பாற்ற போராடும் சிண்ட்லர் எனும் மனிதனின் கதையை கருப்பு வெள்ளையில் சொல்லி கண்ணீர் வரவைத்தார் !அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கரை பெற்றார் . இப்படத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஷோஆ அறக்கட்டளையை நிறுவி ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விட்டார் .

இவருக்கு ஏழு குழந்தைகள் .ஒரு அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்கு முன் தன் பிள்ளைகளிடம் கதையை சொல்லி அவர்கள் கண்கள் ஒளிர்கிறதா என பார்த்த பின்பே அதை படமாக எடுக்க சம்மதம் சொல்வார் . 

"திரையரங்கில் படம் பார்க்கிற ஐநூறு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை மாதிரி மாறி என் படத்தை ரசிக்க வேண்டும் அதுதான் என் குறிக்கோள்" என சொல்கிற நம்பிக்கைக்காரர்.

- பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment