மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியினே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
பேராது நின்ற பெருஞ்கருணை பேராறே.,,,,,
இனிய சிவராத்திரி நாளில் அப்பனை வணங்குவோம்
மங்கலம் தரும் மகாசிவராத்திரி விரதம்
ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருட்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம். சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம். இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத வழிபாட்டு நாளாகும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள். சிவன், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி.
பிரம்மனும் நாராயணனும், சிவனது அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளும் இதுவே. தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது, அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார்.
சதுர்த்தசியன்று தேவர்கள் சிவனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி. ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார்.
அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
Stay blessed 🌹🌹
No comments:
Post a Comment