இராமாநுச நாற்றந்தாதி
13. செய்யும் பசும்துளவத் தொழில் மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் * பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.
விளக்கவுரை - தனது சீரீய தன்மையால் கட்டப்பட்டதும், தன்னுடைய கரம் பட்டதால் புதுப்பொலிவுடன் விளங்கியதும் ஆகிய திருத்துழாய் மாலைகள்; வேதங்கள் போன்று மூன்று வர்ணத்தினர் மட்டுமே கற்க முடியும் என்ற கட்டுப்பாடு வேதம் ஓத அதிகாரம் இல்லாத பெண்களும்-அறியாமையால் மூழ்கியவர்களும் கற்கலாம்படி தமிழ் மொழியில் உண்டாக்கப்பட்ட வேதம் என்று போற்றப்படும் திருமாலை என்ற திவ்யப் பிரபந்தம் அருளிச் செய்தவர்; ஈறில வண் புகழ் நாரணன் என்று கூறுவதற்கு ஏற்ப, என்றும் உள்ள திருக்கல்யாண குணங்கள் உடையவனாக, தாய் தந்தை இவனே என்று கூறும்படியாக, அனைத்துப் பந்துக்களும் இவனே என்று தோன்றும்படியாக திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளை, "ஜயனே அரங்கா”, என்று கூறி அழைத்து நின்றவர்; திருவடிகளைக் காட்டிலும் மேற்பட்ட பொருள் வேறு ஏதும் இல்லை என இருந்தவர் - இப்படிப்பட்டவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆவார். அத்தகைய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளைக் காட்டிலும் வேறு ஒரு பொருளை
விரும்பாத உத்தமரான எம்பெருமானாரின் திருவடிகள் மட்டுமே எனக்குச் சரணாகும், வேறு ஏதும் இல்லை. மெய்யன் என்று கூறுவதன் பொருள் என்ன? ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களை எம்பெருமானார் ஆதிசேஷனாக எப்போதும் அவனுடன் இருந்தபடி அறிந்தவர்; அதனைத் தனது ஸ்ரீபாஷ்யத்தில் உள்ளது உள்ளபடி அருளிச் செய்தார்.
No comments:
Post a Comment