Sunday, January 10, 2016

குரு-தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஜீவ சமாதி - திருவாரூர் :

குரு-தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஜீவ சமாதி -  திருவாரூர் :

              >>   திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயில் பிரமாண்டத் தேரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் ஸ்ரீகுரு தட்சிணமூர்த்தி ஸ்வாமியின் மடாலயம் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் கைவரப்பெற்று பல சித்து வேலைகளைப் புரிந்தார்.     

 >>  தட்சிணாமூர்த்தி ஸ்வாமி வியாதிகளுடனும் விரக்தியடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் தனது இறுதிகாலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து  1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்..

            
         >>  சித்தர்கள்  ஜீவ சமாதியில் ஆழ்ந்தும்  இவ்வையகத்தில் வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள் ..அவர்களின் உடல் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த சமாதி பீடம் விளங்குகிறது.. இவரின் சமாதி  இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது .மடாதிபதி மட்டும் சிறிய  படியின் வழியே  உள்ளே இறங்கி பூசை செய்வார் . 

 
    

         >>  ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது. ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி  நண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிற்று..

           >> ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சாமிகளின் பிறப்பு :  திருச்சிக்கு அருகே உள்ள சிற்றூர் கீழாலத்தூர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை -மீனாம்பிகை தம்பதிகள்  வசித்தனர். பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர் சிவசிதம்பரம் பிள்ளை. இந்தத் தம்பதிக்கு மக்கட்பேறு அமையவில்லை. எனவே பல தலங்களையும் தரிசித்து வந்தனர்.

      >> ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும்  அண்ணாமலையார் தோன்றி நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறப்பேன்  என்று அருளினார்.

         >> அடுத்த நாள் காலை கோயில் சென்று ஆண்டவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர். கனவு கண்டது போல் . மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். 10 மாதங்கள் கழித்து நல்ல ஆண் மகனை ஈன்றெடுத்தார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் அருணாசலம் என்றே சிசுவுக்கு நாமகரணம் சூட்டினர். இவர்தான் பின்னாளில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என அறியப்பட்டார்.

      >> குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மவுனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப் பார்த்தபடி இருப்பான். அருணாசலத்தின் நிலைமை குறித்துப் பெற்றோர் கவலைப்பட்டனர். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை . இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் காவி உடை உடலெங்கும் திருநீறு. கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள் அணிந்த துறவி ஒருவர் வந்தார் .. சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவனடியாரிடம் , தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். ஏன் ஸ்வாமி ? என்று கேட்டார்.  அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டார் துறவி. 

      >> உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது. துறவியார் மெல்லப்  புன்னகைத்தார். பிறகு சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது. 

      >> இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்காய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். அவ்வளவுதான் 5 வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாகப் பேசியது சும்மா இருக்கிறேன். சரிப்பா, சும்மா இருக்கிறாயா, நீ யார்? என்றார் துறவி. மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு “நீயேதான் நான், நானேதான் நீ ”  என்று சுருக்கமாகப் பதில் சொன்னது குழந்தை. உனது பதில் சத்தியம் நான் புறப்படுகிறேன். என்ற துறவி விடைபெற்றார். பெற்றவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.  

 
          >>  சாமிகள் தமது வாழ்நாளில்  பல ஊர்களுக்கும் பயணித்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ... நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்தார். இறுதியாக திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.அங்கே சோமநாத ஸ்வாமி கோயில் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றின் படுகையிலும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தங்கி இருந்த நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தை தவம் இருப்பதில் செலவிட்டார். பசிக்கும்போது சாலையில் இறங்கி அங்கே உணவு யாசித்தார். எது கிடைத்ததோ அதை உண்டு வந்தார்.

 

            >> சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்காத வைத்தியர் இல்லை. சாப்பிடாத மூலிகை இல்லை என்றாலும் பலன் இல்லை. இறுதியாக யாரோ சிலர் சொன்னதன் பேரில் நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி கோயிலில் உள்ள மூர்த்திகளை வணங்கி உணவே எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்கினார்.2 நாட்கள் சென்றன. முதலியாருக்கு நடராஜ பெருமாளின் அருள் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் காலை வேளையில் ஒரு முடிவெடுத்தார். இன்றைக்குள் எனது நோய் குணமாகவில்லை என்றால் இரவில் நடராஜரின் சன்னிதி முன்னாலேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து. கூர்மையான கத்தி ஒன்றைத் தன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டார். 

        >> இரவுவேளை நடராஜருக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் பணி முடிந்ததும் சன்னிதியைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது தூண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்தார். தில்லைப் பெருமானே என் வேண்டுகோளுக்கு நீ இணங்கவில்லை. ஆகவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சன்னிதியில் இருந்த ஓர் அசரீரி வாக்கு. அப்பனே உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய் என்று ஒலித்தது.. மனம் மகிழ்ந்த முதலியார் மறுநாள் அதிகாலையே திருவாரூர் புறப்பட்டார். தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். இரவு வரையில் சன்னிதியிலேயே அமர்ந்து தியானித்தார். அப்போதும் அவரது நோய் குணமாகவில்லை. அப்படியே உறங்கிவிட்டார்.

         >> அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, நாம் உனக்கு அடையாளம் சொன்ன தட்சிணாமூர்த்தி இவர் அல்லர். இதே ஊரில் ஒருவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் செல் என்றார். அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (ஸ்வாமிகள்) கண்டுபிடித்தார் முதலியார். பிறகு ஸ்வாமி கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டார். அந்தக் கணமே முதலியாரைப் பிடித்திருந்த வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஆனந்தம் மேலிட, ஸ்வாமியைப் பலவாறு துதித்து பழம் முதலிய பொருட்களைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்கிற ஸ்வாமி. அதன்பிறகு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்றே வழங்கப்படலானார்.இவர் 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்.. 

          >>  மடாலயம் என்றாலும் மிகப்பெரிய கோயிலாகவே திகழ்கிறது. பலிபீடம், நந்திதேவர் பிராகாரம் என்று விஸ்தாரமாகவே இருக்கிறது மடாலயம் மணி ஒசையும் மத்தள முழக்கமும் சேர பூஜைகள் நடக்கின்றன. இந்த மத்தளத்தை வழங்கியவர் சரபோஜி மன்னர். அதுபோல் ஜீவசமாதியில் இருக்கும் லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கப்படும் பதக்கத்தையும் இந்த மன்னரே வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது

            >> வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடந்து வருகின்றன. தற்போது தவத்திரு குமாரனந்த ஸ்வாமி மற்றும் தவத்திரு பிரமானந்த ஸ்வாமி ஆகிய இருவரும் பட்டத்தில் உள்ள இரு குரு மகா சன்னிதானங்கள் ஆவார்கள். 1984 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். மகான்கள் பிறக்கிறார்கள். மக்களின் சுக துக்கங்களுக்காக தங்களை வருத்திக்கொண்டே வாழ்க்கிறார்கள். மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் எங்கும் வியாபித்து தங்களது இன்னருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிதான்.

         >> மடப்புரம் என்பதே திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதி. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் இருக்கிறது.மிகவும் அருமையாக இருக்கிறது.. சமாதியின் பின்புறம் அமர்ந்து தியானம் செய்ய அருமையான அனுபவங்களை பெறலாம் ...ஒருமுறை வந்து பாருங்கள் ..

No comments:

Post a Comment